பாலிவுட்

நான் க்ரிஷ்ஷாக இருந்தால் கோவிட்டையும், சிகரெட்டுகளையும் அழிப்பேன்: ஹ்ரித்திக் ரோஷன்

ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், தான் நிஜ வாழ்க்கையிலும் க்ரிஷ் போன்ற சூப்பர் ஹீரோவாக இருந்தால் என்ன செய்வேன் என்று கூறியுள்ளார்.

'க்ரிஷ்' என்ற பட வரிசையில் சூப்பர் ஹீரோவாக நடித்து வருகிறார் ஹ்ரித்திக் ரோஷன். அவரது தந்தை ராகேஷ் ரோஷன் தயாரித்து இயக்கிய இந்தப் பட வரிசை மாபெரும் வெற்றி பெற்றது. 'க்ரிஷ் 4' எடுப்பதற்கான ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. அடுத்த வருடம் இந்தப் படம் வெளியாகும் என்றும், இதில் ஹ்ரித்திக் நாயகன் - வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஹ்ரித்திக் தனது மகன்களுடன் அவரது வீட்டு பால்கனியில் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை அவரது ரசிகர் பக்கம் ஒன்று பகிர்ந்தது. இதைப் பார்த்த ஒரு பயனர், "ஹ்ரித்திக் கையில் சிகரெட்டா இருக்கிறது அல்லது நான் தவறாகப் பார்க்கிறேனா? உங்களிடம் அது இல்லை என நம்புகிறேன் ஹ்ரித்திக். அப்படி இருந்தால் அது என்ன மிக மிக வருத்தமடையச் செய்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் கூறியுள்ள ஹ்ரித்திக், "எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை. நான் க்ரிஷ்ஷாக இருந்திருந்தால் இந்தக் (கோவிட்) கிருமியை முதலில் அழித்துவிட்டு, இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு சிகரெட்டையும் அழிப்பேன்" என்று பதிலளித்துள்ளார்.

முன்னதாக, வீட்டிலேயே இருப்பவர்களுக்கான குறிப்புகளை ஹ்ரித்திக் வழங்கினார். மனநலனைப் பாதுகாக்க தினமும் டி வைட்டமினை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று யோசனை வழங்கியுள்ளார். மேலும் தனது மனநலனுக்காக பியானோ கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கும் ஹ்ரித்திக், அது மூளையின் இரண்டு பகுதிகளையும் சுறுசுறுப்பாக வைக்க உதவுவதாகக் கூறியிருந்தார்.

இந்த ஊரடங்கில், மகன்கள் ஹ்ரீஹான் மற்றும் ஹ்ரிதான் இருவரையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தால், ஹ்ரித்திக்கின் முன்னாள் மனைவி சூஸன் கான், தற்காலிகமாக ஹ்ரித்திக்குடன் தங்கி வருகிறார்.

SCROLL FOR NEXT