பாலிவுட்

வாக்குமூலம் அளிக்க வேண்டும்: கனிகா கபூருக்கு காவல்துறை நோட்டீஸ்

ஐஏஎன்எஸ்

காவல் நிலையம் வந்து வாக்குமூலத்தை பதிவு செய்யச் சொல்லி பாலிவுட் பாடகி கனிகா கபூர் வீட்டு வாசலில் லக்னோ காவல்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது இபிகோ 269 மற்றும் 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோயை, தொற்றைப் பரப்பும் வகையில் நடந்து கொண்டதால் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன.

கிருஷ்ண நகர் காவல்துறை உதவி ஆணையர் தீபக் குமார், கனிகா கபூர் காவல் நிலையம் வந்துதான் வாக்குமூலத்தை எழுத்து வடிவில் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கனிகா கபூர், தனக்கு சிகிச்சையளித்த மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தன்னைச் சுற்றிப் பேசப்படும் விஷயங்கள் குறித்து தனக்குத் தெரியும் என்றும், அதில் சில தகவல்கள் தவறானவை என்றும் எழுதியுள்ளார்.

கனிகாவைப் பொருத்தவரை நடந்தவை இதுதான். மார்ச் 10-ஆம் தேதி அன்று அவர் பிரிட்டனிலிருந்து மும்பை வந்திறங்கியுள்ளார். அந்த நேரத்தில் அவர் சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் அப்போது இவர் தனிமையில் இருக்க வேண்டும் என்று எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை.

மார்ச் 11 அன்று லக்னோவுக்கு வந்து தனது குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார். அப்போது உள்ளூர் விமானப் பயணிகளுக்குப் பரிசோதனை முறை இல்லை. மார்ச் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் தனது நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிடவும், இரவு உணவு சாப்பிடவும் வெளியே சென்றுள்ளார்.

மேலும் பிரிட்டன், மும்பை, லக்னோ எனத் தான் சென்ற இடங்களில் சந்தித்து உரையாடிய அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதாகவும் கனிகா குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT