நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி, தேசத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுகளைப் பற்றிக் குறிப்பிட்டு, மக்கள் சமூக விலகலை இன்னும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கரோனா ஊரடங்கு அமலில் வந்ததிலிருந்தே தொடர்ச்சியாக பல்வேறு இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் கரோனா தொடர்பான விழிப்புணர்வை தங்களுடைய சமூக வலைதளத்தில் ஏற்படுத்தி வருகிறார்கள்.
தற்போது இன்ஸ்டாகிராமில் காணொளி ஒன்றை பதிவேற்றியுள்ள ஹேமமாலினி, அதில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கைப் பின்பற்றுமாறு பேசியுள்ளார்.
"நண்பர்களே, கரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிலர் ஊரடங்கைப் பின்பற்றுவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஊரடங்கு விரைவில் முடிய வேண்டும் என்று நாம் விரும்பினால், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்ன சின்ன விதிவிலக்குகள், சலுகைகள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நாம் சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும்.
தயவுசெய்து முகக் கவசம், கர்ச்சீஃப், துண்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும். ஊடகத்தினர், காவல்துறையினர், மருத்துவப் பணியாளர்கள், அரசு நிர்வாகத்தினருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்களது அஜாக்கிரதையான நடத்தை கடுமையாகப் பாதிக்கலாம்.
என்னையும் சேர்த்து ஒட்டுமொத்த தேசமுமே விரைவில் இந்த ஊரடங்கு முடிய வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே, வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" என்று ஹேமமாலினி அந்தக் காணொலியில் பேசியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி ஹேமமாலினி தொடர்ந்து பேசிவருவது குறிப்பிடத்தக்கது.