பாலிவுட்

எதிர்மறை விமர்சனங்களால் உண்மையை மறைத்துவிட முடியாது - சர்ச்சைகளுக்குப் பிறகு முதல்முறையாக வாய்திறந்த கனிகா கபூர் 

செய்திப்பிரிவு

பாலிவுட் பாடகி கனிகா கபூர் கடந்த மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். பின்னர் அவர் லக்னோ சென்று அங்கு நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் கூறவில்லை.

தான் வெளிநாடு சென்று வந்த கனிகா கபூரை இணையத்தில் பலரும் திட்டித் தீர்த்தனர். அவரை கைது செய்யவேண்டும் என்று பல தரப்பிலிருந்து குரல்கள் வலுத்த நிலையில் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகச்சை அளிக்கப்பட்டது. பலமுறை செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் அதில் அவருக்கு கரோனா தொற்று மறைந்து குணமடைந்தது உறுதியானது.

இந்நிலையில் கரோனாவிலிருந்து குணமடைந்த கனிகா கபூர் முதன்முதலில் வாய்திறந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

லண்டன், மும்பை, லக்னோ என நான் தொடர்பில் இருந்த யாருக்கும் கரோனா தொற்று இருப்பதற்காக அறிகுறி இல்லை. அவர்கள் அனைவருக்கும் பரிசோதனையில் நெகட்டிவ் என்றே வந்தது. லண்டனிலிருந்து மும்பை வந்தபோது விமானநிலையத்தில் எனக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அடுத்த நாள் என் குடும்பத்தை பார்க்க லக்னோ சென்றேன். உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு எந்த பரிசோதனையும் செய்யப்படவில்லை. மார்ச் 14 மற்றும் 15 தேதிகளில் நண்பர் ஒருவரின் உணவு விருந்தில் கலந்து கொண்டேன். நான் எந்த பார்ட்டியும் நடத்தவில்லை. அதோடு நான் பூரண உடல்நலத்துடனும் இருந்தேன். மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் எனக்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. எனவே என்னை பரிசோதனை செய்ய வேண்டுகோள் வைத்தேன்.

பரிசோதனையில் எனக்கு பாசிட்டிவ் என்று வந்தது. எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டேன். 3 நெகட்டிவ் பரிசோதனகளுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது 21 நாட்களாக வீட்டில் இருக்கிறேன். என்னை நல்லமுறையில் கவனித்துக் கொண்ட மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். எதிர்மறை விமர்சனங்களை ஒருவர் மீது வீசுவதால் உண்மையை மறைத்துவிட முடியாது.

இவ்வாறு கனிகா கபூர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT