பாலிவுட்

கரோனா பணியாளர்களுக்காக தனது 8 ஹோட்டல்களை வழங்கிய ரோஹித் ஷெட்டி: மும்பை காவல்துறை நன்றி

செய்திப்பிரிவு

கரோனா பணியாளர்கள் தங்கிக் கொள்வதற்காக மும்பையில் உள்ள தனக்குச் சொந்தமான 8 ஹோட்டல்களை இயக்குநர் ரோஹித் ஷெட்டி வழங்கியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைக் கருத்தில்கொண்டு பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். பி.எம். கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி எனத் தொடங்கி பல்வேறு நடிகர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட திரையுலகின் தொழிலாளர்களுக்கும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி மும்பையில் உள்ள தனக்குச் சொந்தமான 8 ஹோட்டல்களை கரோனா பணியாளர்கள் தங்கிக் கொள்வதற்காக வழங்கியுள்ளார். ரோஹித் ஷெட்டியின் இந்தச் செயலுக்கு மும்பை காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மும்பை காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

''மும்பை நகரம் முழுவதுமுள்ள தனக்குச் சொந்தமான 8 ஹோட்டல்களை நமது கரோனா போராளிகள் ஓய்வெடுக்கவும், குளிக்கவும், உடை மாற்றவும், இரண்டு வேளை உணவு ஏற்பாட்டுடன் ரோஹித் ஷெட்டி வழங்கியுள்ளார். இந்த அன்பான உதவிக்கும் மும்பையைப் பாதுகாப்பதில் எங்களுக்கு உதவுவதற்கு அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தில்வாலே, சென்னை எக்ஸ்பிரஸ், சிம்பா, சிங்கம், சூர்யவன்ஷி, கோல்மால் உள்ளிட்ட பல படங்களை ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT