பாலிவுட்

ஓவியங்கள் மூலம் ரூ.1 லட்சம் நிவாரண நிதி திரட்டிய ஃபாரா கான் மகள் 

ஏஎன்ஐ

எனது மகள் வரைந்த ஓவியங்களை ஏலத்தில் விற்றதன் மூலமாக, கோவிட்-19 நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்தைத் திரட்டியுள்ளார் என்று பாலிவுட் இயக்குநர் ஃபாரா கான் அறிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைக் கருத்தில்கொண்டு பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். பி.எம் கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி எனத் தொடங்கி பல்வேறு நடிகர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட திரையுலகின் தொழிலாளர்களுக்கும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

தற்போது தனது சின்ன மகள், ஒரு நாயின் படத்தை வரைவதைப் போல ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ள ஃபாரா கான், "ரூ.1 லட்சத்தை அன்யா ஏற்கெனவே திரட்டியுள்ளார். ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு முன்னாலும், பிறகும், அனைத்து வார இறுதிகளிலும், அன்யா நிதிக்காகத் தொடர்ந்து வரைந்து கொண்டே இருக்கிறாள்.

நிதி தந்த அனைவருக்கும் பெரிய நன்றி. எல்லாப் பணமும் வீதியில் திரியும் மிருகங்களுக்கும், குடிசைப்பகுதிகளில் உணவுப் பொட்டலங்கள் அனுப்பவும் பயன்படுத்தப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்தே, அன்யா தனது ஓவியங்கள் மூலம் நிதி திரட்டி வருகிறார். முன்னதாக, ஐந்து தினங்களில் தனது மகள் ரூ.70,000 நிதி திரட்டியதைப் பகிர்ந்திருந்தார் ஃபாரா கான். மேலும் கரோனா பற்றிய தனது 12 வயது மகனின் ராப் பாடலையும் ஃபாரா கான் பகிர்ந்திருந்தார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒருசில தினங்களில், எந்த நட்சத்திரமும் தாங்கள் உடற் பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர வேண்டாம் என்றும், அப்படிப் பகிர்பவர்களைத் தனது நட்புப் பட்டியலிலிருந்து நீக்குவதாகவும் ஃபாரா கான் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT