மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நடிகை அனுஷ்கா சர்மா வேதனை தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. 21 நாட்கள் ஊரடங்கு என்பது நாளையுடன் (ஏப்ரல் 14) முடிவடைகிறது. இதனை முன்னிட்டு நாளை காலை 10 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
இதற்கு முன்னதாகவே ஒரிசா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் இரவு, பகல் பாராது கடினமாக உழைத்து வருகின்றனர்.
ஆனால் நாடு முழுவதும் ஆங்காங்கே மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதனை பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள சிறு கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"சில கரோனா நோயாளிகளும், அவர்களை முன்னின்று பாதுகாக்கும் சில மருத்துவர்களும் தரக்குறைவாக நடத்தப்படுவதாக வரும் செய்திகளைப் படிக்கும்போது மிகவும் கவலையாக உள்ளது. இது போன்ற தருணங்களில், நாம் ஒருவரையொருவர் பாதுகாப்பதும், அடுத்தவர்களின் கஷ்டத்தில் மிகுந்த கவனத்தோடு இருப்பதும் மிகவும் முக்கியம். சக குடிமக்களை அவமதிக்காமலும், அவர்களுக்குக் களங்கம் ஏற்படுத்தாமலும் நடந்து கொள்வோம். ஒற்றுமையாக நிற்க வேண்டிய நேரம் இது"
இவ்வாறு அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.