பாலிவுட்

செல்லப் பிராணிகளை விட்டுவிடாதீர்கள்: நடிகர் அர்ஜுன் கபூர்

ஏஎன்ஐ

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நிலவும் ஊரடங்கில், யாரும் தங்களது செல்லப்பிராணிகளைக் கைவிடாதீர்கள் என்று நடிகர் அர்ஜுன் கபூர் கோரிக்கை வைத்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் இந்த வேளையில், பலரும் தங்களுடைய செல்லப்பிராணிகளை வெளியே விட்டுவிடுகிறார்கள். அதன் மூலமாக கரோனா பரவும் என்ற வதந்தியே இதற்குக் காரணம். செல்லப்பிராணிகள் மூலம் கரோனா பரவாது என்று பல்வேறு திரையுலக பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு வருடங்களாகத் தான் வளர்க்கும் தன் செல்ல நாய் மேக்ஸை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த அர்ஜுன் கபூர், "இவனுக்கு நான்கு வயதாகிறது. அதிக செல்லம். இவன் யார் சொல்வதையும் கேட்க மாட்டான். என்ன வேண்டுமோ செய்வான். ஆனால் உண்மையில் இவன் எதுவுமே செய்வதில்லை.

இவனுக்கு நானும் அனுஷுலாவும் தான் செல்லம். எங்களைக் கட்டுப்படுத்தி எங்கள் விருப்பங்களை நிறைவேற்றுக் கொள்ளச் சொல்லி கட்டளையிடுவான். இவனால் எந்த பயனும் இல்லை ஆனால் இவன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

கரோனா கிருமி நமது தேசத்தைப் பாதித்திருக்கும் இந்த வேளையில், செல்லப் பிராணிகளை ரோட்டிலேயே விட்டுவிடுகிறார்கள் என்பது பற்றிய செய்திகளைப் படிக்கிறேன். அது என் இதயத்தை நொறுக்குகிறது. உங்கள் செல்லப் பிராணிகளை விட்டுவிடாதீர்கள் ஏனென்றால் அவை உங்களை என்றும் விட்டதில்லை. குரலில்லாதவர்களுக்குக் குரலாக இருங்கள். அவர்களிடம் அன்பு செலுத்துங்கள். செல்லம் கொடுங்கள்" என்று பேசியுள்ளார்.

இயக்குநர் மதுர் பண்டார்கரும் செல்லப் பிராணிகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஒரு வீடியோ பகிர்ந்திருந்தார்.

உலக சுகாதார மையமும், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையமும், செல்லப் பிராணிகள் மூலம் கரோன கிருமி தொற்று பரவாது என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT