பாலிவுட்

மருத்துவர்களைத் தாக்குபவர்கள் மோசமான குற்றவாளிகள்: அஜய் தேவ்கன் சாடல்

பிடிஐ

மருத்துவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துவதாக நடிகர் அஜய் தேவ்கன் கூறியுள்ளார்.

இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடுகள், படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் திரைத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

நாளுக்கு நாள் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் இரவு, பகல் பாராது கடினமாக உழைத்து வருகின்றனர். ஆனால் நாடு முழுவதும் ஆங்காங்கே மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மருத்துவர்கள் தாக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அஜய் தேவ்கன் குறிப்பிடுகையில், ''அடிப்படையற்ற கற்பனைகளைச் செய்துகொண்டு தனது பக்கத்து வீடுகளில் இருக்கும் மருத்துவர்களை ‘படித்தவர்கள்’ தாக்குவதாக வரும் செய்திகளைப் படிக்கும்போது கோபமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது. இதுபோன்ற சொரணையற்ற மக்கள் மோசமான குற்றவாளிகள்'' என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT