சுகாதாரப் பணியாளர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாக நடிகை ஹேமமாலினி வருத்தம் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடுகள், படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் திரைத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி உட்பட மாநில முதல்வர்கள், பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.
நாளுக்கு நாள் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பலரும் இரவு பகல் பாராது கடினமாக உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சுகாதாரப் பணியாளர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாக நடிகை ஹேமமாலினி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ஹேமமாலினி கூறியுள்ளதாவது:
நண்பர்களே, நான் இதை பல செய்தி சேனல்களில் தொடர்ந்து பார்த்து வருகிறேன். சுகாதார பணியாளர்கள் மிகவும் தரக்குறைவாக நடத்தப்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது. தங்கள் சொந்த வீடுகளுக்குள் நுழைவதற்கு கூட அவர்கள் தடுக்கப்படுகிறார்கள்.
இதுபோன்ற ஒரு சூழலில் அவர்கள்தான் நம் பாதுகாவலர்கள். அவர்கள்தான் கீழ்மட்டம் வரை இறங்கி வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளை கண்டறிகிறார்கள். நினைவில் கொள்ளுங்கள், அவர்களை எதிர்ப்பதன் மூலம் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்போடு விளையாடுகிறீர்கள். நாம் அவர்களை கவுரவிக்க வேண்டும். ஜெய்ஹிந்த்’
இவ்வாறு ஹேம மாலினி கூறியுள்ளார்.