திரையுலகைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்கள் 25,000 பேருக்கு நிதியுதவி அளித்த சல்மான் கான், தற்போது அவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் அளித்துள்ளார்.
கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்வேறு துறையைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திரைத்துறை பணியாளர்களின் வாழ்வாதாரத்துக்காக நடிகர் சல்மான் கான் நிதியுதவி வழங்கினார். கிட்டத்தட்ட 25,000 தினக்கூலிப் பணியாளர்களுக்கு அவர் உதவியிருந்தார்.
தற்போது மேலும், அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களையும் சல்மான் கான் தானமாக அளித்துள்ளார். இதுகுறித்து மகாராஷ்டிர முன்னாள் எம்எல்ஏ பாபா சித்திக் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
"தினக்கூலிப் பணியாளர்களுக்கு நீங்கள் செய்துள்ள தாராள உதவிக்கு நன்றி சல்மான் கான். மக்களுக்கு உதவி என்று வரும்போது எல்லோரையும் விட நீங்கள் எப்போதும் ஒரு படி முன்னால் இருக்கிறீர்கள். அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது" என்று சித்திக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கிடங்கிலிருந்து பெரிய லாரிகளில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
சல்மானின் ரசிகர்கள் இதை வைத்து ட்விட்டரில் தங்கள் அபிமான நட்சத்திரத்தை இன்னமும் அதிகமாகப் புகழ்ந்து வருகின்றனர். சல்மான் கான் பன்வேலில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் தனது சகோதரனின் மகனுடன் தனிமையில் நாட்களைக் கழித்து வருகிறார். அங்கிருந்து தனது தந்தை சலீம் கானுடன் வீடியோ கால் மூலம் தொடர்பில் இருக்கிறார்.