போதைப்பொருள் உட்கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதற்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் விளக்கம் அளித்துள்ளார்.
கரோனா அச்சத்தால் இந்தியா முழுக்கவே ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வீடியோ கால் மூலமாக நண்பர்களுடன் கலந்துரையாடி வருகிறார்கள். அவ்வாறு அனுராக் காஷ்யப் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி அவரை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது.
அந்த வீடியோவை ட்விட்டரில் மும்பை காவல்துறையைக் குறிப்பிட்டு ட்வீட் செய்த ஒரு பயனர், "மும்பை காவல்துறையினரே இதைப் பார்க்கிறீர்களா? இங்கு அனுராக் காஷ்யப் போதை மருந்து உட்கொண்டிருக்கிறார். இது இந்தியாவில் சட்டவிரோதமானது" என்று பகிர்ந்தார்.
இதற்குப் பதில் சொன்ன அனுராக், "ஆமாம் காவல்துறையினரே. அதைப் பாருங்கள். முதலும் கடைசியாகத் தெளிவுபடுத்துகிறேன். நான் புகையிலையைச் சுருட்டிப் பிடிக்கிறேன். தயவுசெய்து நையாண்டி செய்பவர்களின் திருப்திக்காக நன்றாக விசாரித்துக் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதற்கு நெட்டிசன்கள் அவரை விட்டுவைக்கவில்லை. ஊரடங்கு அமலில் இருக்கும்போது அவருக்கு எப்படி புகையிலை கிடைத்தது என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
"உங்கள் நேர்மை ஆச்சரியப்படுத்துகிறது சார். புகையிலையை வாங்கி அதைச் சுருட்டுகிறீர்கள். நல்லது. ஒரு நிமிடம், எங்கிருந்து புகையிலை வாங்கினீர்கள்? மருந்துக் கடையா அல்லது காய்கறிக் கடையா" என்று ஒரு பயனர் நக்கலாகக் கேட்டிருந்தார்.