மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முகக் கவசங்கள், வேகப் பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றின் உற்பத்திக்காக மும்பை மாநகராட்சிக்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.3 கோடி நிதி அளித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுக்கவே எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கும் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியை அக்ஷய் குமார் அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது. தற்போது மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முகக் கவசங்கள், வேகப் பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றின் உற்பத்திக்காக மும்பை மாநகராட்சிக்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.3 கோடி நிதி அளித்துள்ளார்.
மேலும், நேற்று (ஏப்ரல் 9) தனது ட்விட்டர் பக்கத்தில் மும்பை காவல்துறை மற்றும் மாநகராட்சிக்கு அக்ஷய் நன்றி தெரிவித்தார். "நம்மையும் நம் குடும்பங்களையும் பாதுகாப்பாக வைக்க இரவு பகலாக ஒரு பெரிய படையே பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நம் மனதிலிருந்து நன்றி கூறுவோம் ஏனென்றால் அதைத்தான் நம்மால் இப்போது செய்ய முடியும்" என்று பகிர்ந்தார்.
இன்னொரு ட்வீட்டில், "பெயர் அக்ஷய்குமார், நகரம் மும்பை, நான் மற்றும் என்னைச் சார்ந்தவர்களின் சார்பாக, மும்பையின் காவல்துறை, மாநகராட்சி பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்கள், அரசாங்க ஊழியர்கள், வீட்டுக் காவலுக்கு இருப்பவர்கள் என அனைவருக்கும் இதயத்திலிருந்து நன்றி" என தனது புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார்.
ஆரம்பத்தில் 25 கோடி நிதி குறித்துப் பேசியிருந்த அக்ஷயின் மனைவி ட்விங்கிள் கன்னா, "என் கணவர் என்னைப் பெருமைகொள்ளச் செய்கிறார். இவ்வளவு பணம் தருகிறீர்களே, நமது நிதிகளில் கை வைக்க வேண்டுமே என்று கேட்டபோது, 'நான் நடிக்க ஆரம்பித்தபோது என்னிடம் எதுவுமே இல்லை. ஆனால் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். எனவே, எதுவுமே இல்லாதவர்களுக்கு என்னால் முடிந்ததை எப்படிச் செய்யாமல் இருக்க முடியும்' என்றார்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.