தனது கண் பார்வை மங்கியது குறித்து கவலை தெரிவித்துள்ள நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு கண் பார்வை பறிபோய் விடும் என்ற பயம் இருந்ததாகக் கூறியுள்ளார்.
பாலிவுட்டின் மிகப்பெரியப் பிரபலமாக அறியப்படும் அமிதாப் பச்சன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர். ட்விட்டர், வலைப்பூ என தினசரி தன் சிந்தனைகளைப் பகிர்ந்து வருகிறார். கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து, தனது பக்கங்களில் கரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
தனக்கான வலைப்பூவில் தொடர்ந்து பதிவிட்டு வரும் அமிதாப் பச்சன், தனது கண் பார்வையின் நிலை குறித்து சற்றே கவலையுடன் எழுதியுள்ளார்.
"எனக்குப் பார்வை மங்கலாகத் தெரிகிறது. எனக்குள் இருக்கும் லட்சக்கணக்கான உடல் உபாதைகளோடு சேர்த்து கண் பார்வையும் பறிபோகப் போகிறது என்று நான் சில நாட்களாக எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்.
ஆனால், அன்றைய நாட்களில் எனது அம்மா தனது புடவையின் முந்தானையை எடுத்து, அதை உருட்டி, ஊதி, என் கண்களில் இதமாக வெப்பத்தை வைப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அவ்வளவுதான் பிரச்சினை தீர்ந்துவிடும். எனவே அதை முயன்றேன். வெந்நீரில் டவலை நனைத்து கண்ணில் வைத்துக் கொண்டேன்.
பின்னர் மருத்துவரிடம் பேசினேன். அவரது வழிகாட்டுதலைப் பின்பற்றி அவர் சொன்ன மருந்தை ஒவ்வொரு மணிநேரத்துக்கு ஒரு முறை கண்களில் போட்டேன். எனக்குப் பார்வை பறிபோகாது என்று அவர் உறுதியளித்தார். அதிக நேரம் கணினியின் முன் செலவிடுவதால் எனது கண்கள் சோர்வடைந்துள்ளன என்று சொன்னார். அவ்வளவே.
மேலும், ஆம், எனது அம்மாவின் பழைய வழிமுறை வேலை செய்தது. ஆஹா! என்னால் இப்போது பார்க்க முடிகிறது" என்று தனது வலைப்பூவில் எழுதிய பதிவில் அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.