கரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்க சோனு சூட், தன் ஹோட்டலை இலவசமாக வழங்கினார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு மருத்துவமனைகளில் தனியாக வார்டு தயார் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைகளைத் தாண்டி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய திருமண மண்டபங்கள், கல்லூரி வளாகங்களை கரோனா சிகிச்சைக்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று அறிவித்து வருகிறார்கள்.
இதனிடையே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வரும் சோனு சூட் தனது ஹோட்டலை மருத்துவப் பணியாளர்களுக்காக வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மக்களின் உயிரைக் காப்பாற்ற இரவு பகலாக உழைக்கும் நம் நாட்டின் மருத்துவப் பணியாளர்களுக்கு எனது பங்கைச் செய்வது பெரிய கவுரவம். மும்பையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் அவர்களுக்கு ஓய்வு தேவை. இதற்காக மும்பையில் இருக்கும் எனது 6 மாடி ஹோட்டலை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்க இலவசமாக வழங்குகிறேன். இந்த முன்னெடுப்பு குறித்து மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது".
இவ்வாறு சோனு சூட் தெரிவித்துள்ளார்.
சோனு சூட்டின் இந்தச் செயலுக்கு இணையத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.