பாலிவுட்

'மஸக்கலி' ரீமிக்ஸ்: 'டெல்லி 6' இயக்குநர், பாடலாசிரியர் காட்டம்

செய்திப்பிரிவு

'மஸக்கலி' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இருப்பது குறித்து 'டெல்லி 6' இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் காட்டமாக பதிவிட்டுள்ளனர்.

2009-ம் ஆண்டு அபிஷேக் பச்சன், சோனம் கபூர், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'டெல்லி 6'. ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரான் இயக்கியிருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், பாடல்கள் ஹிட்டடித்தன. குறிப்பாக 'மஸக்கலி' என்ற பாடல் பெரும் வைரலானது. 'டெல்லி 6' படத்தின் இசை உரிமை டிசீரிய்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.

தற்போது 'மர்ஜாவன்' படத்துக்காக 'மஸக்கலி' படத்தை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தினர். அந்தப் பாடலின் வீடியோ நேற்று (ஏப்ரல் 8) இணையத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிக்கும்படி இல்லை என்று கடும் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. மேலும், அசல் பாடலின் அழகைக் கெடுக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ரீமிக்ஸ் பாடலை நேரடியாக இல்லாமல், மறைமுகமாகக் கடுமையாகச் சாடியிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது 'டெல்லி 6' படத்தின் இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் இருவருமே ரீமிக்ஸ் பாடல் குறித்து காட்டமாக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

'டெல்லி 6' இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தனது ட்விட்டர் பதிவில், "’டெல்லி 6’ படத்தில் இடம்பெற்றுள்ள ’மஸக்கலி’ பாடல் அன்பு மற்றும் உணர்ச்சிகளால் உருவாக்கப்பட்டது. அசல் நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டிய அடையாளம் அப்பாடல். இப்போது வந்துள்ள ரீமிக்சிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அது உங்கள் காதுகளைச் சேதப்படுத்தி விடும். டெல்லி 6 படமும் பாடல்களும் அதீத அன்பு மற்றும் உணர்வுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. வரப்போகும் தலைமுறைகளுக்காக அசல் படைப்புகளைப் பாதுகாப்போம். ரீமிக்ஸ் பாடல்களுக்கு நோ சொல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

'மஸக்கலி' பாடலை எழுதிய பிரஸான் ஜோஷி தனது ட்விட்டர் பதிவில், "மஸக்கலி உட்பட 'டெல்லி 6' படத்துக்காக எழுதப்பட்ட அனைத்து பாடல்களும் இதயத்துக்கு நெருக்கமானவை. ரஹ்மான் மற்றும் பிரஸான் ஜோஷி, பாடகர் மோஹித் சவுகான் ஆகியோரின் அசல் படைப்பு தெரிந்தே பயன்படுத்தப்படுவது வருத்தமாக உள்ளது. டி சிரீஸ் நிறுவனத்தின் கவனத்துக்கு.. ரசிகர்கள் அசல் படைப்பின் பக்கம் நிற்பார்கள் என்று நம்புவோமாக" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT