பாலிவுட்

23,000 தினக்கூலிப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.3000 செலுத்திய சல்மான் கான்

பிடிஐ

இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடுகள், படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் திரைத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி உட்பட மாநில முதல்வர்கள், பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கால் வேலையிழந்துள்ள 25,000 தினக்கூலி சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் சல்மான் கான் உதவ உள்ளதாக தகவல் வெளியாகின.

அதன்படி திரைத்துறையில் உள்ள தினக்கூலி பணியாளர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் சல்மான்கான் நிவாரணத் தொகையை செலுத்தி வருவதாக இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் (FWICE) தலைவர் பி.என்.திவாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

பொருளாதார உதவிகள் தேவைப்படும் 23,000 தினக்கூலி தொழிலாளர்களின் இறுதிகட்டப் பட்டியலை சல்மான் கானிடம் கொடுத்தோம். தவணை முறையில் அவர்களுக்கு பணம் செலுத்துவதாக சல்மான் கான் கூறியிருந்தார். அதன்படி நேற்று (09.04.20) தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் முதற்கட்டமாக தலா 3000 ரூபாயை சல்மான் கான் செலுத்தியுள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் பணம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார். எங்கள் தொழிலாளர்களுக்கு உதவும் அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு பி.என்.திவாரி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT