மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன.
இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி உட்பட மாநில முதல்வர்கள், பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஊரடங்கால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள 1.2 லட்சம் ஆதரவற்ற மக்களுக்கு அக்ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்தோடு இணைந்து உணவு வழங்க பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முடிவு செய்துள்ளார். இதற்கு அக்ஷய பாத்ரா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்ஷய பாத்ரா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''உதவி தேவைப்படும் அனைத்து இந்திய மக்களுக்கும் உணவு வழங்க உடனடியாக முன்வந்த ஹ்ரித்திக் ரோஷனுக்கு தலைவணங்குகிறோம். உங்களுடைய முயற்சிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளது.
அக்ஷய பாத்ராவின் இந்தப் பதிவுக்கு நன்றி கூறி பதிலளித்துள்ள ஹ்ரித்திக், ''நாட்டில் யாரும் பசியுடன் உறங்குகிறார்களா என்று உறுதி செய்யும் சக்தி உங்களுக்குக் கிடைக்க விரும்புகிறேன். நீங்கள்தான் களத்தில் இருக்கும் உண்மையான சூப்பர் ஹீரோக்கள். நம் வழியில் நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைத் தொடர்ந்து செய்வோம். யாருடைய பங்கும் பெரிதும் அல்ல சிறிதும் அல்ல. நம் அனைவருக்கும் வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.