பாலிவுட்

லேடி காகா நடத்தும் இணைய இசை நிகழ்ச்சி: ஷாரூக்கான் - ப்ரியங்கா சோப்ரா பங்கேற்க சம்மதம்

செய்திப்பிரிவு

லேடி காகா நடத்தும் இணைய இசை நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து ஷாரூக் கான் மற்றும் ப்ரியங்கா சோப்ரா இருவரும் பங்கேற்கவுள்ளனர்.

பிரபல அமெரிக்க பாப் பாடகி லேடி காகா, இணையத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். உலக சுகாதார அமைப்புடன் சேர்ந்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு "One World: Together at Home" (ஒரே உலகம்: அனைவரும் வீட்டிலேயே ஒற்றுமையாக) என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18-ல் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவில் டிஜிட்டல் தளத்தில் மட்டுமல்லாது பல்வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் காணக் கிடைக்கும். இது மருத்துவத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படுகிறது. ஆனால் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்த நிதி திரட்டல் முடியும் என லேடி காகா கூறியுள்ளார்.

ஜிம்மி ஃபேலன், ஜிம்மி கிம்மெல், ஸ்டீஃபன் கோல்பர்ட் என அமெரிக்க தொலைக்காட்சிப் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பில்லி ஜோ ஆர்ம்ஸ்ட்ராங், க்றிஸ் மார்டின், டேவிட் பெக்காம், எல்டன் ஜான், இட்ரிஸ் எல்பா, ஜான் லெஜண்ட், கீத் அர்பன், கெர்ரி வாஷிங்டன், ஸ்டீவி வொண்டர் உள்ளிட்ட பிரபலங்களும், இந்தியாவிலிருந்து ஷாரூக் கான், ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோரும் தோன்றவுள்ளனர்.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேடி காகா, "ஏப்ரல் 18 மக்கள் முன் அரங்கேறும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் பெருமை. இதில் நானும் பாடவுள்ளேன். சர்வதேச சமூகம் என்ற ஒற்றை இனத்தைக் கொண்டாடவும், மனித இனத்தின் வலிமையைக் கொண்டாடவும் விரும்புகிறோம்.

தொடர்ந்து நாங்கள் நிதி திரட்டவுள்ளோம். இந்த நிகழ்ச்சி நிதி திரட்ட அல்ல. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் நிதி திரட்டுவோம். நிகழ்ச்சியைப் பார்க்கும்போது நீங்கள் உங்கள் பணத்தை ஓரம் வைத்துவிட்டு, ரசியுங்கள். உங்கள் அனைவருக்கும் உரித்தானது இது" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT