பாலிவுட்

நமது நாகரிகத்தின் முக்கியமான சின்னம் ராமர்: கங்கணா ரணாவத்தின் ராம நவமி பகிர்வு

ஏஎன்ஐ

தனது ரசிகர்களுக்கு ராம நவமி வாழ்த்துகளைச் சொன்ன நடிகை கங்கணா ரணாவத், ராமர் ஏன் நமது நாகரிகத்தின் முக்கியமான சின்னமாக விளங்குகிறார் என்று கூறி ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

கங்கணாவின் சகோதரி ரங்கோலி ட்விட்டரில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் தனது ரசிகர்களிடம் கங்கணா கேள்வி கேட்டு ஆரம்பிக்கிறார்.

"ராமர் ஏன் நம் பூமியில் வாழ்ந்த மிக முக்கியமான மனிதராகப் பார்க்கப்படுகிறார் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா. அவர் சிவனைப் போல எங்கும் நிறைந்தவர் அல்ல. கிருஷ்ணரைப் போல ஆழமாகச் சிந்திப்பவரும் அல்ல. (ஏனென்றால்) ராமர் நேர்மையான மனிதர். தனது வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் மூலம் நமக்குத் தியாகம் என்றால் என்ன என்று உணர்த்தியுள்ளார்" என்று பேசியுள்ளார்.

மேலும், 19 வயதில் தான் 'லம்ஹே' படத்தில் நடித்தபோது, அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கப் புகை பிடிக்க ஆரம்பித்ததாகவும், தொடர்ந்து அதற்கு அடிமையானதாகவும் கங்கணா கூறியிருக்கிறார். ஆனால், பின்னர் தியாகம் என்ற கருத்தைப் பின்பற்றிப் புகை பிடிப்பதைக் குறைத்ததாகவும் கூறியுள்ளார். தற்போது தனது தேர்வுகள் மட்டுமே தன் வாழ்க்கையை நடத்துகிறது. இதற்கு முன் தன்னைப் பாதித்த வேறெந்த விஷயங்களும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியை உதாரணமாகச் சொன்ன கங்கணா, அவரது நடவடிக்கைகள் அனைத்தும் தியாகம் என்ற கருத்தைச் சார்ந்தே இருந்தது என்றும், தன்னைப் பொறுத்தவரை ராமர் அகிம்சையைப் போதிப்பதால் அவர்தான் தனக்கு மிகச்சிறந்த மனிதர் என்றும் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT