கரோனா வைரஸ் சிக்கலுக்கு உதவ 25 கோடி ரூபாய் கொடுப்பது தொடர்பாக மனைவி எழுப்பிய கேள்விக்கு அக்ஷய் குமார் பதிலளித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக வேண்டுகோள் விடுத்தார்.
உடனடியாக, தனது சேமிப்பிலிருந்து 25 கோடி ரூபாய் அளிப்பதாக அக்ஷய் குமார் அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அக்ஷய் குமாரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால், அவருடைய பெயர் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது.
அக்ஷய் குமார் 25 கோடி ரூபாய் அளிப்பதாக வெளியிட்ட ட்வீட்டைக் குறிப்பிட்டு அவரது மனைவி ட்விங்கிள் கண்ணா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த மனிதர் என்னைப் பெருமைப்படுத்துகிறார். இது அதிகமான தொகையாக இருப்பதால் அவருக்குச் சம்மதமா என்று அவரிடம் கேட்டபோது, "எதுவும் இல்லாமல் தொடங்கினேன். இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதிலிருந்து நான் எப்படி பின்வாங்க முடியும்?" என்று கூறினார்".
இவ்வாறு ட்விங்கிள் கண்ணா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.