நடிகர் அமிதாப் பச்சன், கரோனா தொற்று தொடர்பாகத் தான் பகிர்ந்த தவறான பதிவை நீக்கியுள்ளார்.
கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்தே பல பிரபலங்களும் தங்களை சமூக ஊடகத்தில் தொடர்பவர்களுக்கு விழிப்புணர்வுத் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில் கரோனா தொற்று ஈக்கள் வழியாகப் பரவுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனுடன், "நான் இன்று ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். நம் தேசம் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகிறது. அதில் நீங்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். சமீபத்தில் சீனாவில் ஒரு ஆராய்ச்சியில் மனிதர்களின் சுவாசத்தை விட அவர்களது கழிவுகளில் கரோனா கிருமி அதிக நேரம் உயிரோட இருக்கும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளது உங்களுக்குத் தெரியுமா?
ஒருவருக்கு நோய் தீர்ந்தாலும் அவரது கழிவுகளில் கிருமி உயிரோடு இருக்கும். ஒரு ஈ அதில் உட்கார்ந்துவிட்டு பின் காய்கறி, பழங்கள் என நாம் உண்ணும் உணவில் உட்கார்ந்தால் நோய் இன்னும் தீவிரமாகப் பரவும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தத் தவறான தகவல் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் இந்த விஷயத்தை மறுத்துள்ளார். தான் அந்த ட்வீட்டை பார்க்கவில்லையென்றாலும் தொற்று நோய்கள் ஈக்கள் மூலம் பரவாது என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே சுய ஊரடங்கின் போது பிரதமர் மோடி கைதட்டச் சொன்னதன் காரணம், கைதட்டுவதால் ஏற்படும் அதிர்வலைகள் கொரோனாவின் தீவிரத்தைக் குறைக்கும் என்று அமிதாப் கூறியிருந்த கருத்து பலரால் விமர்சிக்கப்பட்டது. பலரது எதிர்ப்புகளுக்குப் பின் அதை அமிதாப் நீக்கினார்