பாலிவுட்

கரோனா பரிசோதனையைத் தவிர்த்த கனிகா கபூர்: சக பாடகி சோனா மோஹபத்ரா கடும் சாடல்

செய்திப்பிரிவு

கரோனா பரிசோதனையைத் தவிர்த்து, அலட்சியமாக இருந்ததற்காக பாலிவுட் பாடகி கனிகா கபூரை சக பாடகி சோனா மோஹபத்ரா கடுமையாகச் சாடியுள்ளார்.

லண்டனில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனிகா கபூர், பத்து நாட்களுக்கு முன்பு அங்கிருந்து லக்னோ வந்திறங்கியுள்ளார். ஆனால் தான் எங்குப் பயணப்பட்டோம் என்பதை கனிகா மறைத்து, தொடர்ந்து விமான நிலையத்தில் கரோனா அறிகுறிக்கான பரிசோதனையையும் தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது.

லக்னோ வந்த பின் உள்ளூர் விமானப் பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியது, பல்வேறு விருந்துகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்றது என கனிகா தொடர்ந்து இயங்கியுள்ளார். இந்த விருந்துகளில் இந்தியாவின் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

சில நாட்களுக்கு முன்புதான் கனிகாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதனால் கனிகா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவருடன் பங்குபெற்றவர்களுக்கும் கரோனா தொற்று வரலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

கனிகாவுக்கு தொற்று இருக்கிறது என்று தெரிந்தவுடன், அவரோடு ஒரு விருந்தில் கலந்துகொண்ட ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவரது மகன் பாஜக எம்.பி. துஷ்யந்த் சிங் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் ஆகியோர் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொண்டு தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

கனிகாவின் பொறுப்பற்ற செயலை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள பாடகி சோனா, 'இந்தியாவில் கரோனா தொற்று பரவலாகும். ஏனென்றால் அங்கு சுயமாக எதுவும் செய்யாமல் அரசை மட்டும் கேள்வி கேட்கும் பொறுப்பற்ற மூடர்கள் நிறைய உள்ளனர்' என்ற செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

இந்தச் செய்தியோடு, "இந்தியாவில் வந்திறங்கிய கனிகா தான் பயணப்பட்ட நாட்டின் விவரங்களை மறைத்துள்ளார். (அது எப்படி என்பது கடவுளுக்கே வெளிச்சம்), லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த வேளையில் பார்ட்டிக்குச் சென்றுள்ளார். இதெல்லாம் அவருக்குத் தொற்று இருக்கும்போது. பிரதமரின் உரை எவ்வளவு எளிமையாக இருந்தது என்பதைப் பற்றி எனக்குப் போதிக்கும் மக்களே, உண்மையில் இதெல்லாம் எளிமையா?

மேலும், கரோனாவை எதிர்கொள்ள சமூகத்திலிருந்து விலகியிருப்பது மட்டுமே ஒரே வழி என்று பேசுபவர்களும் கூட கனிகாவுடன் இந்த விருந்துகளில் கலந்துகொண்டனர். எம்.பி. துஷ்யந்த் சிங், உத்தரப் பிரதேசத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரும் கனிகாவுடன் இருந்தனர். கர்நாடகாவின் முதல்வர், 2,000 பேர் கலந்துகொண்ட ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT