கரோனா அச்சம் தொடர்பாக, '83' படத்தின் வெளியீடு ஒத்துவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளன. கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். கரோனா முன்னெச்சரிக்கையாகக் கல்விக் கூடங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பெரிய ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும், படப்பிடிப்புகளும் எதுவும் நடைபெறவில்லை.
இதனிடையே, கரோனா அச்சம் தொடர்பாக பல்வேறு படங்களும் தங்களுடைய வெளியீட்டை மாற்றியமைத்து வருகிறது. தற்போது இந்தப் பட்டியலில் '83' படமும் இணைந்துள்ளது. 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை வென்ற வரலாற்றை முன்வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. கபீர் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஜீவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கரோனா அச்சம் தொடர்பாக தங்களுடைய வெளியீட்டை ஒத்துவைப்பதாக '83' படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாகப் படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”சமீபத்திய கோவிட் 19 தொற்று காரணமாக, அதனால் ஏற்படக்கூடும் இடர் காரணமாக, வளர்ந்து வரும் சுகாதார ரீதியிலான கவலைகளை மனதில் கொண்டு, ’83’ பட வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளோம்.
சூழல் இயல்பானவுடன் வெளியீடு பற்றிய முடிவை எடுப்போம். எங்கள் ரசிகர்கள், தேவையான முன்னெச்சரிக்கையைச் செய்துகொள்ள வேண்டும், அவர்களுக்கு அன்பானவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 83 படமே சாதகமற்ற சூழலை எதிர்கொள்வது பற்றித்தான். நாம் விரைவில் இதிலிருந்து மீண்டும் வருவோம் என நம்புகிறோம்”
இவ்வாறு '83' படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.