கரோனா வைரஸ் தொடர்பாக சினிமா தலைப்புகள் பதிவு செய்யப்படுவதை ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் சாடியுள்ளார்.
கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து உலகமே போராடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் சில திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கரோனாவை வைத்து சில சினிமா தலைப்புகளை வேகமாகப் பதிவு செய்து வருகின்றன. சமீபத்தில் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் 'கரோனா ப்யார் ஹை' என்ற தலைப்பைப் பதிவு செய்தது பரபரப்பான செய்தியானது.
நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நாயகனாக அறிமுகமான படம் 'கஹோ நா ப்யார் ஹை'. இந்தத் தலைப்பைச் சற்று மாற்றியே 'கரோனா ப்யார் ஹை' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹ்ரித்திக் ரோஷனின் தந்தையும், 'கஹோ நா ப்யார் ஹை' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ராகேஷ் ரோஷன் இந்தத் தலைப்புகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்துள்ளது ராகேஷ் ரோஷன், இது போன்ற சினிமா தலைப்புகள், உலகம் தற்போது எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் இந்த சூழலைக் கிண்டலடிப்பது போல் உள்ளது என்றும், இந்த வேளையில் இது போன்ற விஷயங்கள் சிறுபிள்ளைத்தனம் மற்றும் முதிர்ச்சி அற்ற செயல் என்றும் சாடியுள்ளார். மேலும் இது போன்றவர்கள் ஒழுங்காகச் சிந்திக்காததால் மக்கள் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
'கஹோ நா ப்யார் ஹை' தலைப்பை ஒட்டியே இந்தத் தலைப்பு இருப்பதால் இது தொடர்பாக எதுவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பீர்களா? என்று ரோஷனிடம் கேட்டபோது, இரண்டு தலைப்புகளுக்கும் அர்த்தம் வேறு. அதனால் இது குறித்து எதுவும் செய்ய முடியாது என்று பதிலளித்துள்ளார்.