பாலிவுட்

கரோனா அச்சம்: 'ஜெர்சி' இந்தி ரீமேக் படப்பிடிப்பு நிறுத்தம்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, 'ஜெர்சி' இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 85 பேர் கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா அச்சத்தால் பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது. தற்போது படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு வருகிறது. இதில் முதலாவதாக 'ஜெர்சி' படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, படக்குழுவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நாயகன் ஷாகித் கபூர் தனது ட்விட்டர் பதிவில் "இது போன்ற சமயத்தில் இந்த தொற்று பரவுவதை எப்படியெல்லாம் தடுக்க முடியுமோ அதையெல்லாம் செய்ய வேண்டியது நமது சமூகப் பொறுப்பு. ’ஜெர்சி’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுப் படக்குழுவினர் அனைவரும் அவர்கள் வீட்டில் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருக்க வகை செய்யப்பட்டுள்ளது. பொறுப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

கவுதம் இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான படம் 'ஜெர்சி'. இந்தப் படத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பால், தற்போது இந்தி ரீமேக் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நானி கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர் நடித்து வருகிறார். தெலுங்கு படத்தை இயக்கிய கவுதமே, இந்தி ரீமேக்கையும் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT