'தப்பட்' படத்தின் வசனத்துக்கு விருது கிடைக்கவில்லை என்றால், நானே விருது விழா தொடங்குவேன் என்று தாப்ஸி தெரிவித்துள்ளார்.
இந்தித் திரையுலகில் தாப்ஸி நடிப்பில் வெளியாகியுள்ள 'தப்பட்' படத்தைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் காட்சிகள், சொல்ல வரும் கருத்துகள் என அனைத்துமே ஆதரவு பெருகி வருகிறது. தொடர்ச்சியாக வசூலிலும் ஏற்றம் கண்டு வருகிறது.
இதனிடையே தனியார் யூ-டியூப் சேனலுக்கு 'தப்பட்' படத்தை விளம்பரப்படுத்தப் பேட்டியளித்துள்ளார் தாப்ஸி. அதில், இந்தப் படத்தின் வசனங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்றால், நானே விருது விழா தொடங்குவேன் என குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பேட்டியில் 'தப்பட்' வசனங்கள் தொடர்பாக தாப்ஸி கூறியிருப்பதாவது:
நான் ஏற்கனவே அனுபவ் சின்ஹாவின் இயக்கத்தில் ’முல்க்’ படத்தில் நடித்திருப்பதால் அவரது எழுத்துக்கு நான் மிகப்பெரிய விசிறி. தீவிரமான பிரச்சினைகள் பற்றிய வசனங்களை இவரளவுகு யாரும் சிறப்பாக எழுதுவதில்லை என நினைக்கிறேன். எளிமையாக இருக்கும். ஆனால் அதிக தாக்கத்தைக் கொடுக்கும். ’தப்பட்’ பட வசனத்துக்கு இவருக்கு விருது கிடைக்கவில்லை என்றால் நானே தனியாக ஒரு விருது விழாவை ஆரம்பித்து இவருக்கு விருது கொடுப்பேன். பின் இவர் ஒவ்வொரு படம் எழுதும்போதும் விருது தருவேன்
இவ்வாறு தாப்ஸி தெரிவித்துள்ளார்.