பாலிவுட்

’கைதி’ இந்தி ரீமேக்: அஜய் தேவ்கான் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

'கைதி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க அஜய் தேவ்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா, ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும், சாம் சி.எஸ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. ஆனால், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவோ தங்களுடைய நிறுவனமே அனைத்து மொழிகளிலும் தயாரிக்கவுள்ளதாக அறிவித்தது. முதலில் இந்தி மொழி ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

'கைதி' படத்தை பல்வேறு இந்தி திரையுலகின் முன்னணி நாயகர்களும் பார்த்திருந்தார்கள். ஆனால், சமீபமாக பார்த்த அஜய் தேவ்கான், இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டினார். இதனைத் தொடர்ந்து கார்த்தி வேடத்தில் நடிக்க அஜய் தேவ்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ரீமேக்கை யார் இயக்கவுள்ளார் என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை.

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 2021, பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். தற்போது அஜய் தேவ்கானுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் இயக்குநர் யார் என்பது குறித்த ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT