பாலிவுட்

சினிமாவில் புதிய பாதையைத் திறந்துள்ளீர்கள் ஆயுஷ்மான் குரானா: குஷ்பு புகழாரம்

செய்திப்பிரிவு

சினிமாவில் புதிய பாதையைத் திறந்துள்ளீர்கள் ஆயுஷ்மான் குரானா என்று குஷ்பு புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆனந்த் எல்.ராய், பூஷன் குமார், ஹிமன்ஷு ஷர்மா மற்றும் கிருஷ்ணன் குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஷுப் மங்கள் ஸ்யாதா ஸாவ்தான்'. ஹிதேஷ் கேவல்யா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா, ஜிதேந்திரா குமார், நீனா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு இந்தி திரையுலகில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. தன் பாலின ஈர்ப்பாளர்கள் தங்களின் திருமணத்துக்காக எப்படிப் பெற்றோரைச் சம்மதிக்க வைக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். விமர்சகர்களும் இந்தப் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போது, இந்தப் படத்தில் நடித்ததிற்காக ஆயுஷ்மான் குரானாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் குஷ்பு. இது தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

'' 'ஷுப் மங்கள் ஸ்யாதா ஸாவ்தான்' படத்தை எடுத்தவர்களுக்குப் பாராட்டுகள். அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும் படம். இயக்குநர் ஹிதேஷ் கேவல்யா இந்தக் கதையை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். இப்படி ஒரு படத்தை எடுத்ததற்கு இதை எடுத்தவர்கள் பெருமைப்பட வேண்டும். இந்தக் குழுவுக்குப் பெரிய வாழ்த்துகள்.

ஆயுஷ்மான், சினிமாவில் புதிய பாதையைத் திறந்துள்ளீர்கள். வித்தியாசமாக யோசிக்க ஊக்குவித்திருக்கிறீர்கள். இதுவரை மூடி மறைவாக வைத்திருந்த கதைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கதாசிரியர்கள் தயாராக இருக்கின்றனர். நவீன சினிமாவுக்குப் புதிய பெயர் கிடைத்திருக்கிறது. இந்தப் படம் ஒரு நல்ல கலைப்படைப்பு. அந்தக் குழுவால் அட்டகாசமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நடித்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்”.

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT