பாலிவுட்

இந்தியில் தமிழ்க் கதாபாத்திரத்தில் தனுஷ்

செய்திப்பிரிவு

'அத்ரங்கி ரே' இந்திப் படத்தில் தமிழ்க் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தவுடன், இந்தியில் நடிக்க உள்ள படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.

'அத்ரங்கி ரே' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கவுள்ளார். அக்‌ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோர் தனுஷுடன் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளது.

இதில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளை மதுரையில் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளார் ஆனந்த் எல்.ராய். சாரா அலி கான் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார். தனுஷ் - சாரா அலி கான் காட்சிகளை மதுரையிலும், அக்‌ஷய் குமார் - சாரா அலி கான் காட்சிகளை பிஹாரிலும் படமாக்கவுள்ளனர்.

30 நாட்களில் உங்களுடைய காட்சிகளை முடித்துவிடுவேன் என்று தனுஷுடம் உத்தரவாதம் அளித்துள்ளார் ஆனந்த் எல்.ராய். ஆகையால், 'அத்ரங்கி ரே' இந்திப் படத்தில் தனது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் தனுஷ்.

SCROLL FOR NEXT