பாலிவுட்

'பிரம்மாஸ்திரா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

அயன் முகர்ஜி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் 'பிரம்மாஸ்திரா' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இருவரும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படம் 'பிரம்மாஸ்திரா'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவடைந்துவிட்டாலும், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் வெளியீட்டைத் தாமதப்படுத்திக் கொண்டே வந்தது.

அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால், கிராபிக்ஸ் பணிகள் தாமதத்தால், 2020-ம் ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என்று அயன் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

தற்போது, படக்குழுவினர் வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இல்லாமல், டிசம்பர் 4-ம் தேதி தான் படம் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்பது தெளிவாகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT