நடிகர் தனுஷின் அடுத்த இந்திப் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்தப் படத்தில் அக்ஷய் குமார், சாரா அலி கானுடன் தனுஷ் நடிக்கவுள்ளார்.
2013-ம் ஆண்டு, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் 'ராஞ்சனா' என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தனுஷ் அறிமுகமானார். இதன் பிறகு பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் 'ஷமிதாப்' என்ற ஒரே ஒரு இந்திப் படத்தில் மட்டுமே தனுஷ் நடித்திருந்தார். கடந்த ஆண்டு இறுதியில், மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தனுஷ் தெரிவித்திருந்தார். ஆரம்பத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் தனுஷ் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வந்தன. தற்போது அக்ஷய் குமாருடன் தனுஷ் நடிக்கவுள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'அத்ரங்கி ரே' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சாரா அலி கான் தனுஷின் ஜோடியாக நடிக்கிறார். அக்ஷய் குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படம் குறித்து பேசியுள்ள அக்ஷய் குமார், "ஆனந்த் எல் ராயுடன் பணியாற்றுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். அவர் அவரது கதைகளைச் சித்தரிக்கும் பாணியை எப்போதுமே ரசித்திருக்கிறேன். அவர் என்னிடம் இந்தப் படத்தின் கதையைச் சொல்லும்போது பத்து நிமிடங்களுக்குள் சரி என்று சொல்லிவிட்டேன். மிகச் சவாலான கதாபாத்திரம். அதே நேரத்தில் நான் மறுத்துச் சொல்ல முடியாத அளவு விசேஷமான கதாபாத்திரமும் கூட. என் வாழ்க்கை முழுவதும் இதை நினைவில் வைத்திருப்பேன்" என்று கூறியுள்ளார்.
ஆனந்த் எல் ராய் பேசுகையில், "அக்ஷய் போன்ற தன்னம்பிக்கை கொண்ட நடிகர்களால்தான் இப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க முடியும். அவர் எப்போதுமே தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டிருக்கிறார். சவால்களுக்குத் தயாராக இருக்கிறார். தனுஷ் சாரா ஜோடி சுவாரசியமாக இருக்கும். இந்த இருவரும் திரையில் கொண்டு வரும் புத்துணர்ச்சியை ரசிகர்கள் விரும்புவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் போஸ்டர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சாரா, "என்னால் என் அதிர்ஷ்டத்தை நம்பமுடியவில்லை. எனது அடுத்த படம் 'அத்ரங்கி ரே'. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ரஹ்மானின் இசையில் நடிப்பது ஆசிர்வாதம். என்னுடனும், மிகத் திறமையான, பணிவான தனுஷுடனும் கைகள் கோத்திருக்கும் அக்ஷய் குமாருக்கு நன்றி. எப்போது ஆரம்பிப்போம் என்று காத்திருக்கிறேன். அடுத்த வருடம் பிப்ரவரி 14-ம் தேதி அன்று படம் வெளியாகவுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
பூஷன் குமார் தயாரிப்பில் ஹிமான்ஷு சர்மா திரைக்கதை எழுதியுள்ள 'அத்ரங்கி ரே' படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1 முதல் தொடங்குகிறது.