இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் பயோபிக்கில் டாப்ஸி நடிக்கும் 'சபாஷ் மித்து' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ். 1999-ம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக மகளிர் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர், ஒரு நாள் போட்டியில் 6000 ரன்களைக் கடந்த ஒரே வீராங்கனை, தொடர்ச்சியாக 7 முறை 50 ரன்களைக் கடந்த ஓரே வீராங்கனை என பல சாதனைகளை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நிகழ்த்தியுள்ளார் மித்தாலி ராஜ். மேலும், கிரிக்கெட் போட்டியில் 20 ஆண்டுகளைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற பெயரும் எடுத்துள்ளார்.
தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறு, இந்தியில் படமாக உருவாகி வருகிறது. இதில் மித்தாலி ராஜ் ஆக டாப்ஸி நடித்து வருகிறார். 'சபாஷ் மித்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ராகுல் தொலாகியா இயக்கி வருகிறார். இவர் 'லம்கே', 'பர்சானியா' மற்றும் 'ராயீஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தை வயகாம் 18 நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இன்று (29.01.2020) இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ''உங்களுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி என்னிடம் தொடர்ந்து கேட்கப்படுகிறது. ஆனால் நீங்கள் அவர்களிடம் சென்று உங்களுக்குப் பிடித்த பெண் வீரர் யார் என்று கேளுங்கள். இது போன்ற கேள்விகள் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரையும் தான் விரும்புவது விளையாட்டையா அல்லது பாலினத்தையா என்று யோசிக்க வைக்கிறது. மித்தாலி ராஜ், ஆட்டத்தையே மாற்றியமைப்பவர் நீங்கள்'' என்று டாப்ஸி கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த மித்தாலி ராஜ், ''நன்றி டாப்ஸ், என்னுடைய கதைக்கு உயிர் கொடுக்கும் உங்களைப் பெரிய திரையில் காண ஆவலாக உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
'சபாஷ் மித்து' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும் டாப்ஸிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.