பாலிவுட்

செல்ஃபி வீடியோ எடுத்த இளைஞரின் செல்போனை பறித்துச் சென்ற சல்மான்கான்: வலுக்கும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

செல்ஃபி வீடியோ எடுத்த இளைஞரின் செல்போனை பறித்துச் சென்ற சல்மான் கானின் செயலுக்கு இந்திய தேசிய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் படம் 'ராதே'. இப்படத்தில் ரன்தீப் ஹூடா, திஷா பதானி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் சல்மான் கான் கோவா சென்றிருந்தார். கோவா விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும் வழியில் விமான நிலைய ஊழியர் ஒருவர் சல்மான் கானின் அனுமதி இல்லாமல் தனது மொபைல் போனில் செல்ஃபி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதனால கோபமடைந்த சல்மான்கான் வேகமாகச் சென்று அந்த இளைஞரின் கையில் இருந்த செல்போனை ’வெடுக்’ எனப் பிடுங்கி அந்த இளைஞரிடம் மீண்டும் செல்போனைத் திருப்பி தராமலே நடந்து சென்றார். இந்தக் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் நேற்று (28.01.20) வைரலானது. நெட்டிசன்கள் பலரும் சல்மான் கானின் இந்தச் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சல்மான் கானுக்கு காங்கிரஸின் மாணவர் அணியான இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் அஹ்ராஸ் முல்லா, கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''இந்தப் பிரச்சினையில் நீங்கள் தலையிட்டுத் தீவிரமாக விசாரிக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். அந்த ரசிகரைப் பொது இடத்தில் அசிங்கப்படுத்தியதற்காக நடிகர் சல்மான் கானைப் பகிரங்க மன்னிப்பு கேட்கச் செய்யவேண்டும். தவறினால் இது போன்ற முரட்டுத்தனமான நடிகர்களை எதிர்காலத்தில் கோவாவுக்குள் அனுமதிக்கக் கூடாது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக முன்னாள் எம்.பி. நரேந்திர சவாய்க்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஒரு பிரபலமான நடிகராக இருப்பதால் ரசிகர்களும், பொதுமக்களும் உங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளத்தான் செய்வார்கள். உங்கள் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. நீங்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT