’லால் சிங் சட்டா’ திரைப்பட வெளியீட்டுக்காகத் தனது ’பச்சன் பாண்டே’ திரைப்படத்தின் வெளியீட்டை மாற்றி வைத்துள்ளார் நடிகர் அக்ஷய்குமார்.
டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்றது.
இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்து வருகிறார். இந்தப் படம் 2020 கிறிஸ்துமஸ் வார இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதே நாளில் அக்ஷய்குமார் நடிக்கும் ’பச்சன் பாண்டே’ திரைப்படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படம் ஒரே நாளில் வந்து வெற்றி பெற்றாலும் இரண்டு படங்களின் வசூலும் சற்று பாதிக்கப்படும் எனப் பாலிவுட் வர்த்தக நோக்கர்கள் கவலை தெரிவித்திருந்தனர். தற்போது ஆமிர்கானின் வேண்டுகோளுக்கு இணங்கி, ’பச்சன் பாண்டே’ படத்தின் தயாரிப்பாளர் சாஜித் நதியாத்வாலாவும், நடிகர் அக்ஷய்குமாரும் ’பச்சன் பாண்டே’ திரைப்படத்தின் வெளியீடு தேதியை மாற்றி வைத்துள்ளனர்.
இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆமிர்கான், "சில நேரங்களில் ஒரு உரையாடலில் எல்லாம் சரியாகிவிடும். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ’பச்சான் பாண்டே’ படத்தின் வெளியீடு தேதியை மாற்றி வைக்க ஒப்புக்கொண்ட என் நண்பர்கள் அக்ஷய்குமார் மற்றும் சாஜித் நதியாத்வாலாவுக்கு நன்றி. அவர்கள் படத்துக்கு என் வாழ்த்துக்கள். ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
’பச்சன் பாண்டே’, தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த ’வீரம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.