பாலிவுட்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன்: தீபிகா படுகோன்

செய்திப்பிரிவு

மன அழுத்தம் என்பது பொதுவான ஒரு நோய். நானும் அந்த நோயால் பாதிக்கப்பட்டேன் என்று நடிகை தீபிகா படுகோன் கூறியுள்ளார்.

உலகப் பொருளாதார மன்றம் சார்பில் வருடாந்திரக் கூட்டம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் கடந்த திங்கட்கிழமை (20.01.2020) அன்று நடைபெற்றது. இதில் நடிகை தீபிகா படுகோனுக்கு மனநல விழிப்புணர்வுக்கான வருடாந்திர கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டது.

விருதைப் பெற்றுக்கொண்ட தீபிகா படுகோன் மேடையில் பேசியதாவது:

''என்னுடைய தனிப்பட்ட உறவுகளில் ஏற்பட்ட விருப்பு வெறுப்புகள் எனக்குப் பல விஷயங்களை கற்றுக்கொடுத்தன. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரிடமும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் தனியாக இல்லை. நான் இந்த விருதைப் பெற்றுக்கொள்ளும் இந்த நேரத்தில் உலகில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

மன அழுத்தம் என்பது பொதுவான அதே சமயம் தீவிரமான ஒரு நோய். மற்ற நோய்களைப் போலவே அதுவும் குணப்படுத்தக் கூடியது என்று புரிந்துகொள்ளவேண்டியது மிகவும் முக்கியம். நானும் இந்த நோயால் பாதிக்கப்பட்டேன். அதுதான் என்னுடைய ‘லிவ் லவ் லாஃப்’ அறக்கட்டளையை உருவாக்க என்னைத் தூண்டியது''.

இவ்வாறு தீபிகா படுகோன் பேசினார்.

தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, மனநல சிகிச்சைக்கான நிதியுதவிகளையும் தீபிகா செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT