'தி ஃபேமிலி மேன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டதைப் பற்றி நெகிழ்ச்சியான பதிவொன்றை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் 'தி ஃபேமிலி மேன்'. இதில் மனோஜ் பாஜ்பாயீ, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்தொடரை ராஜ் நிதிமோரு, கிருஷ்ணா டி.கே ஆகிய இருவரும் இயக்கியிருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்த இத்தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வெப் சீரிஸில் நடிப்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்த சமந்தா, ''மாறிவரும் டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்றவாறு நானும் மாறவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இந்தியா முழுவதும் பிரபலமடைந்த ஒரு சீரிஸில் அறிமுகமாவதை விட ஒரு சிறந்த வழி எனக்குத் தெரியவில்லை” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் 'தி ஃபேமிலி மேன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டதைப் பற்றி நெகிழ்ச்சியான பதிவொன்றை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“ ‘தி ஃபேமிலி மேன் சீசன் 2’ படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் மறக்க முடியாதது. நான் இதற்கு முன்பு நடித்தவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தை என்னை நம்பிக் கொடுத்த இயக்குநர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு இருட்டு அறையில் என்னை நானே அடைத்துக் கொண்டு ‘அவளுடைய’ உலகத்தை என்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாகக் கண்டறிவேன் என நேற்றுதான் உறுதியளித்தது போல இருக்கிறது. இப்போது படப்பிடிப்பு முடிந்து விட்டது. நிச்சயமாக அதை நான் கெடுத்து விடவில்லை என்று பெருமிதத்துடன் என்னால் கூற முடியும்.”
இவ்வாறு சமந்தா குறிப்பிட்டுள்ளார்.