பாலிவுட்

சைஃப் அலி கான் மகள் என்பதில் பெருமை; ஒப்பீடுகள் அர்த்தமற்றவை: சாரா அலி கான்

செய்திப்பிரிவு

சைஃப் அலி கானின் மகளாக இருப்பதற்குத் தான் பெருமைப்படுவதாக நடிகை சாரா அலி கான் கூறியுள்ளார்.

சைஃப் அலி கான் - அமிர்தா சிங் தம்பதியின் மகளான சாரா அலி கான் 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். சாராவின் தாத்தா, பாட்டியும் பிரபல பாலிவுட் நடிகர்களே.

தனது நடிப்பு வாழ்க்கை குறித்து சாரா பேசியதாவது:

"உண்மையில் நான் இன்னமும் சைஃப் அலி கானின் குழந்தை தான். அது எப்போதும் மாறாது. அவரது மகள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். மக்களுக்கு என் நடிப்பு பிடித்திருந்தால் நல்லது. என்னை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

அனன்யா கபூர், ஜான்வி கபூர், நான் என மூவருமே இளம் வயதினர். எங்களுக்கிடையேயான ஒப்பீட்டை ஏன் செய்கிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஒருவரை இன்னொருவரோடு ஒப்பிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் என் சமகால நடிகர்கள். நண்பர்கள். அவர்களுக்கு நல்லது நடக்க நான் வாழ்த்துகிறேன். எனது அடுத்த படத்துக்கு அவர்கள் வாழ்த்துவார்கள் என்று நம்புகிறேன்".

இவ்வாறு சாரா அலி கான் கூறியுள்ளார்.

இம்தியாஸ் அலி இயக்கத்தில் ’லவ் ஆஜ் கல்’ திரைப்படத்தில் சாரா, கார்த்திக் ஆர்யன் நடித்துள்ளனார். இந்தப் படத்தின் முதல் பாகத்தை 2009-ம் ஆண்டு சைஃப் அலி கான், தீபிகா படுகோன் நடிக்க, இம்தியாஸ் அலி இயக்கியிருந்தார்.

இரண்டு படங்கள் பற்றிய கேள்விக்கு சாரா பதில் அளிக்கையில், "இது அந்தப் படத்தின் தொடர்ச்சி அல்ல. இளைஞர்கள் இன்று எப்படிக் காதலிக்கிறார்கள் என்பதையே இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம். 2009-ம் ஆண்டு, அன்றைய தலைமுறை எப்படிக் காதலிக்கிறார்கள் என்பது பற்றிய அற்புதமான படத்தை எடுத்தார்கள் என்று நினைக்கிறேன். இப்போது அதே மாதிரியான முயற்சியைத் தந்துள்ளோம். அதனால் ஒப்பீடு இருக்கத்தான் செய்யும்.

கார்த்திக் எனது தந்தையின் கதாபாத்திரத்தில் நடிக்க முயலவில்லை. நானும் தீபிகாவின் கதாபாத்திரத்தில் நடிக்க முயலவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களோடு புதிதாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறோம். இன்று காதலுக்கான விளக்கம் மாறியுள்ளது என நினைக்கிறேன். அதைப் பிரதிபலிக்கத்தான் நாங்கள் அனைவரும் சேர்ந்துள்ளோம். ஒப்பீடுகள் தேவையில்லை என்றாலும் அதுதான் திரைத்துறையில் வளர்கிறது என்பதால் அவை தொடரும்" என்று சாரா பேசியுள்ளார்.

’லவ் ஆஜ் கல்’ பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகிறது.

SCROLL FOR NEXT