பாலிவுட்

சாராவின் காலில் விழுந்த கார்த்திக் ஆர்யன்: வைரலாகும் வீடியோ

செய்திப்பிரிவு

’லவ் ஆஜ் கல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நாயகி சாரா அலி கானின் காலில் நடிகர் கார்த்திக் ஆர்யன் விழுந்து வணங்கிய காணொலி வைரலாகி வருகிறது.

இம்தியாஸ் அலி இயக்கத்தில் ’லவ் ஆஜ் கல்’ திரைப்படத்தில் சாரா, கார்த்திக் ஆர்யன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தை 2009-ம் ஆண்டில் சைஃப் அலி கான், தீபிகா படுகோன் நடிக்க, இம்தியாஸ் அலி இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் என்று அறியப்பட்டாலும் இது அந்தப் படத்தின் தொடர்ச்சி அல்ல.

புதிய ’லவ் ஆஜ் கல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் படத்தின் நாயகன், நாயகி, இயக்குநர் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சாரா அலி கானுடன் நடித்த நாயகர்களிடையே இருக்கும் ஒற்றுமை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சாரா, "நான் நடித்த நான்கு படங்களிலும் என்னுடன் நடித்த நடிகர்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர்களாகவும், அதிக ஊக்கமும் ஆதரவும் தருபவர்களாகவும் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே அவர்கள் பாணியில் சிறந்த நடிகர்கள். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு ஊக்கம் தருவதாக இருந்தது. என்னை அனுபவம் இல்லாத நடிகை போல நடத்தவில்லை. இதுதான் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

சாரா கூறிய பதிலைக் கேட்டதும் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கார்த்திக் ஆர்யன் சாராவின் காலைத் தொட்டு வணங்கினார். முதலில் அதிர்ச்சியடைந்த சாரா, பின் இந்தச் செயலைப் பார்த்துச் சிரித்தார். இந்தக் காணொலி இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT