ஷபானா ஆஸ்மி விபத்து தொடர்பாக ஊடக நண்பர்களுக்கு ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை ஷபானா ஆஸ்மி. இன்று (ஜனவரி 18) பிற்பகல் 3 மணி அளவில் மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாபூர் பகுதியில் ஷபானா காரில் வந்தபோது, சாலையின் ஓரத்தில் நின்றிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதாகக் கூறப்படுகிறது.
மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விபத்து நடந்தவுடன் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நடிகை ஷபானா ஆஸ்மியையும், ஓட்டுநரையும் மீட்டனர். காயத்துடன் மீட்கப்பட்ட நடிகை ஷபானா ஆஸ்மி மும்பையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாயின.
பொதுமக்கள் தொடங்கி அனைவருமே ஷபானா ஆஸ்மிக்கு விபத்து என்று பகிரத் தொடங்கினர். மேலும், ஊடகத்திலும் இந்தப் புகைப்படங்கள் வெளியாயின. இது தொடர்பாக முன்னணி நடிகையான ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பான தனது ட்விட்டர் பதிவில் ஷ்ரத்தா கபூர், "இது ஊடகத்திலிருக்கும் நண்பர்கள் அனைவருக்குமான வேண்டுகோள். ஒருவர் விபத்தில் சிக்கிவிட்டால் தயவுசெய்து அந்தப் புகைப்படங்களைப் பதிவிடாதீர்கள். கொஞ்சம் உணர்வுபூர்வமாகப் பச்சாதாபத்துடன் அணுகுங்கள். அவரது குடும்பத்துக்கும், நெருங்கியவர்களுக்கும் அது எவ்வளவு துயரத்தைத் தரும் என்பதை எண்ணிப் பாருங்கள். தயவுசெய்து உடனடியாக நீக்கிவிடுங்கள். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.