ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள இந்திப் படத்தில் அக்ஷய் குமார் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், இந்தியில் தனுஷ் அறிமுகமான படம் 'ராஞ்ஹானா (Raanjhanaa)'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அப்படம் இந்தியில் தனுஷிற்கு ஏற்ற அறிமுகப் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசனுடன் இணைந்து 'ஷமிதாப்' படத்தில் நடித்தார்.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக இந்திப் பட வாய்ப்புகள் வந்தாலும், தமிழிலேயே கவனம் செலுத்தி வந்தார் தனுஷ். மேலும், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மீண்டுமொரு இந்திப் படத்தில் நடிக்கவுள்ளதை மட்டும் உறுதிப்படுத்தினார்.
ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி படுதோல்வியைச் சந்தித்த 'ஜீரோ' படத்தைக் கடைசியாக இயக்கியிருந்தார் ஆனந்த் எல்.ராய். தற்போது அதிலிருந்து மீண்டு வர புதிய கதையொன்றை எழுதி வருகிறார். இதில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்தக் கதையில் நாயகியாக சாரா அலிகான் நடிக்கவுள்ளதாகவும், கவுரவ கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு கார்த்திக் சுப்புராஜ் படம், 'கர்ணன்', செல்வராகவன் படம், ராம்குமார் படம் ஆகிய தமிழ் படங்களுடன், ஆனந்த் எல்.ராயின் இந்திப் படத்துக்கும் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.