'83' படத்தில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜீவாவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை '83' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக ரன்வீர் சிங்குக்குப் பயிற்சி அளித்துள்ளார் கபில் தேவ். மற்ற நடிகர்களுக்கு யஷ்பால் சர்மா, பல்விந்தர் சாது போன்ற வீரர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.
இந்தப் படத்தில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். இதற்காகக் கடுமையான பயிற்சி செய்து நடித்துள்ளார் ஜீவா. தற்போது ஜீவாவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தக் கதாபாத்திரத்துக்கு முதலில் விஜய் தேவரகொண்டா தொடங்கி பல்வேறு தென்னிந்திய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் ஜீவா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இந்தியில் மட்டுமன்றி இந்தியளவில் அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை விஷ்ணு இந்தூரி, மது, கபீர் கான், தீபிகா படுகோன், மற்றும் சஜீத் நடியட்வாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.