பாலிவுட்

'83' படம் உருவாக்கம்: கபில்தேவ் நம்பிக்கை

செய்திப்பிரிவு

தன்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அணியையும் '83' படம் சொல்லும் எனத் தான் நம்புவதாக கிரிக்கெட் வீரர் கபீல் தேவ் கூறியுள்ளார்.

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை '83' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக ரன்வீர் சிங்குக்குப் பயிற்சி அளித்துள்ளார் கபில் தேவ். மற்ற நடிகர்களுக்கு யஷ்பால் சர்மா, பல்விந்தர் சாது போன்ற வீரர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.

இந்தப் படத்தைப் பற்றிப் பேசியுள்ள கபில் தேவ், "நான் தான் அணித் தலைவன். நான் அணியுடன் சேர்ந்திருப்பவன். எல்லோரும் அவர்களின் ஆட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நான் என் ஆட்டத்தைப் பார்க்க மாட்டேன். அணியின் ஆட்டத்தைத்தான் பார்ப்பேன். அதுதான் கிரிக்கெட் என்பது. அது ஒரு தனி நபரைப் பற்றியது கிடையாது. எல்லோரும் 100 சதவீதம் முயற்சி செய்தார்கள். அப்படித்தான் உலகக் கோப்பையை வென்றோம்.

நாங்கள் என்ன செய்தோம் என்று தெரியும். திரைப்படத்தில் அதிலிருந்து எவ்வளவு எடுத்து படமாக்குவார்கள் என்பதைப் பற்றி கருத்து கூறுவது கடினம். எனவே நீங்கள் உங்கள் பக்கக் கதையைச் சொல்லலாம். அவர்கள் எடுப்பார்கள். அவர்கள் புத்திசாலிகள். தேவையான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள்.

முதலில் நான் கதையைக் கேட்டபோது குழப்பமாக இருந்தது. எப்படி அதைத் திரையில் சொல்வார்கள் என்பது தெரியவில்லை. அதைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. அது எப்படிப் படமாக வரும் என்பதில் எனக்குக் கவலையும் அக்கறையும் உள்ளது. ஆனால் எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT