அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'குட் நியூஸ்' திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பெரும் சாதனை புரிந்துள்ளது.
ராஜ் மேத்தா இயக்கத்தில் அக்ஷய் குமார், கரீனா கபூர், தில்ஜித், கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'குட் நியூஸ்'. ஹைரோ யாஷ் ஜோஹர், அருணா பாட்டியா, கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா, ஷாஷாங் கைத்தான் மற்றும் அக்ஷய் குமார் இணைந்து தயாரித்த இந்தப் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு டிசம்பர் 27-ம் தேதி வெளியானது.
ஒரே குடும்பப் பெயர் கொண்ட இரண்டு தம்பதிகள் செயற்கை கருத்தரித்தல் மையத்தின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகிறார்கள். ஆனால் பெயர் குழப்பத்தால் இவர்களின் உயிரணுக்கள் இடம் மாறியிருப்பதைத் தெரிந்துகொள்ளும்போது பிரச்சினையாகிறது. இதை முழுக்க காமெடியாகச் சொல்லியிருக்கும் படம்தான் 'குட் நியூஸ்’.
சில மாதங்களாக சரியான வெற்றி கிடைக்காமல் தடுமாறி வந்த இந்தித் திரையுலகினரை, இந்தப் படத்தின் வசூல் சந்தோஷமடைய வைத்துள்ளது. படம் வெளியான 7 நாட்களில் உலக அளவில் மொத்த வசூல் 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
அக்ஷய் குமாரின் முந்தைய படமான 'ஹவுஸ் ஃபுல் 4' படத்தின் வசூல், சர்ச்சையை உண்டாக்கியது. ஆனால், 'குட் நியூஸ்' மக்களிடையே வரவேற்பு பெற்றிருப்பதால் உற்சாகமாகியுள்ளார் அக்ஷய் குமார். இந்த மாபெரும் வசூலுக்குத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படக்குழுவினர் ஒவ்வொருவரது பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார் கரண் ஜோஹர்.
2020-ம் ஆண்டு ஒவ்வொரு பண்டிகையின்போதும் தனது படம் வெளியாவது போல் திட்டமிட்டுள்ளார் அக்ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.