இயக்குநர் சஞ்சய் குப்தா 'ரக்ஷக்' என்கிற கிராஃபிக் நாவலைத் திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
கிராஃபிக் நாவல்கள் திரைப்படமாவது ஹாலிவுட்டில் வழக்கம். இந்தியாவில் கிராஃபிக் நாவல்கள் இன்னமும் பெருவாரியான மக்களிடம் போய்ச் சேராத நிலையில் 'ரக்ஷக்' என்கிற இந்திய கிராஃபிக் நாவலைத் திரைப்படமாக்குவதற்கான உரிமையை இயக்குநர் சஞ்சய் குப்தாவின் வைட் ஃபெதர் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படத்தை குப்தாவே இயக்கவுள்ளார்.
தானாக அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் ஒரு சூப்பர் ஹீரோ பற்றிய கதை இது. இது பற்றிப் பதிவிட்டுள்ள குப்தா, "இந்தியாவில் ஒரு கிராஃபிக் நாவல் பிரம்மாண்டமான திரைப்படமாவது இதுவே முதல் முறை. இந்தப் படத்தை நான் இயக்கவுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுடன் 'ரக்ஷக்' நாவலின் மூன்று அட்டைப் படங்களையும் பகிர்ந்துள்ளார்.
தற்போது ஜான் ஆப்ரஹாம், இம்ரான் ஹாஷ்மி, ஜாக்கி ஷெராஃப், சுனில் ஷெட்டி ஆகியோர் நடிக்கும் மும்பை சாகா என்கிற கேங்ஸ்டர் படத்தை சஞ்சய் குப்தா இயக்கி வருகிறார். இந்தப் படம் ஜூன் 19, 2020-ல் வெளியாகவுள்ளது. ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான இவரது கடைசிப் படம் 'காபில்' விமர்சகர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் சுமாரான வரவேற்பையே பெற்றது நினைவுகூரத்தக்கது.