நான படேகருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதிய சாட்சியங்கள் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் காவல்துறை சொன்னதை எதிர்த்து நடிகை தனுஸ்ரீ தத்தா எதிர்ப்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
’ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற 2008 திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்பில், நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும், துன்புறுத்தினார் என்றும் நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த அக்டோபர் 2018 அன்று நானா படேகருக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, நானா படேகர், நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீ சித்திக், இயக்குநர் ராகேஷ் சாராங் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதிய சாட்சியங்கள் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஸ்ரீயின் வழக்கறிஞர் நிதி சாத்புதே இதை எதிர்த்து அந்தேரி மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதில் பொய்யான அறிக்கையை சமர்ப்பித்ததற்காக விசாரணை அதிகாரிக்கு எதிராக நீதிமன்றம் அவமதிப்பு விசாரணையைத் தொடர வேண்டும் என்றும், லஞ்ச ஒழிப்புத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையை மும்பை காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.