பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், தனது தந்தையும், மூத்த நடிகருமான பங்கஜ் கபூருடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்.
'அர்ஜூன் ரெட்டி'யின் இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' திரைப்படம் பாலிவுட்டில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால், மீண்டும் தெலுங்குப் பட ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் ஷாகித் கபூர்.
தெலுங்கில் நானி நடிப்பில் கவுதம் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'ஜெர்சி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில்தான் ஷாகித் கபூர் நடிக்க இருக்கிறார்.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில் ஷாகித் கபூரின் ஆலோசகர் கதாபாத்திரத்தில் அவரது தந்தையும் மூத்த பாலிவுட் நடிகருமான பங்கஜ் கபூர் நடிக்க உள்ளார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.
’ஜெர்சி’ படத்தை தெலுங்கில் இயக்கிய கவுதமே இந்தியிலும் இயக்க இருக்கிறார். இந்தி ரீமேக் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'கபீர் சிங்' திரைப்படம் ஷாகித் கபூருக்கு வெற்றியைத் தேடித் தந்ததால் இப்படமும் அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.