ஆமிர்கான் நடிப்பில் உருவாகும் ’லால் சிங் சட்டா’ படத்தில், ஆமிர்கானின் கதாபாத்திரத் தோற்றத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
ரயிலுக்குள் கையில் சிவப்பு டப்பாவுடன் ஆமிர்கான் உட்கார்ந்திருக்கிறார். பிங்க் நிற சட்டையும், பிங்க் நிற டர்பனும் அணிந்திருப்பது போல ஆமிர்கானின் தோற்றம் இதில் உள்ளது. பஞ்சாபி மொழியில் வணக்கங்களுடன் இந்த போஸ்டரை ஆமிர்கான் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கே இந்தப் படம். டாம் ஹாங்க்ஸ் கதாபாத்திரத்தில் ஆமிர்கான் நடிக்கிறார். ’3 இடியட்ஸ்’, ’தலாஷ்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆமிர்கானுடன் கரீனா கபூர் சேர்ந்து நடிக்கிறார்.
இன்றளவும் ’ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் வசனங்களும், காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் அள்ளியது.
அத்வைத் சந்தன் இயக்கும் இந்தப் படம் 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) தினத்தன்று வெளியாகிறது.