கொல்கத்தா,
கொல்கத்தா 25வது சர்வதேச திரைப்படவிழாவை ரசிகர்கள் ஆரவாரத்தோடு பாலிவுட், பெங்காலி, வெளிநாட்டு சினிமா நட்சத்திரங்கள் புடைசூழ ஷாருக்கான் இன்று தொடங்கி வைத்தார்.
நேதாஜி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பாலிவுட் பெங்காலி முன்னாள் திரை நட்சத்திரமான ராக்கி குல்சார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் 'தாலி கேர்ள்' புகழ் ஸ்ராபாந்தி சாட்டர்ஜி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோர் ரசிகர்களின் குத்துவிளக்கு ஏற்றினர்.
ஜெர்மனியின் ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் வோல்கர் ஸ்க்லோண்டோர்ஃப், 'செக்ஸ் லைஸ் அண்ட் வீடியோடேப்' நடிகை ஆண்டி மெக்டொவல், ஸ்லோவாக் திரைப்பட இயக்குநர் துசன் ஹனக், பாலிவுட் ஆட்டூர் மகேஷ் பட் மற்றும் பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனுமான சவுரவ் கங்குலி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சத்யஜித் ரேயின் 'சாருலதா' நாயகி மாதவி முகர்ஜி, திரைக்கலைஞர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான நுஸ்ரத் ஜஹான், மிமி சக்ரவர்த்தி, சதாப்தி ராய் மற்றும் டெப் ஆதிகாரி ஆகியோருடன் திரைப்பட இயக்குனர்களான கவுதம் கோஷ் மற்றும் சந்தீப் ரே ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
வண்ணமயமான இத் திரைப்படவிழாவின் தொடக்கவிழாவுக்கு முன்னதாக சினிமா வரலாற்றின் வீடியோ தொகுப்பு திரையிடப்பட்டது, அதைத் தொடர்ந்து பரம்பிரதா சாட்டர்ஜி தயாரித்த வங்கத் திரைப்படங்களின் அழகிய வெளிப்புற இடங்களை காட்டும் ஒரு குறும்படமும் திரையிடப்பட்டது.
பார்வையாளர்களின் பலத்த கரகோஷங்களுக்கிடையே முக்கிய விருந்தினரான ஷாருக்கானுக்கு 25 வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா நினைவு கோப்பையை நுஸ்ரத் ஜஹான் வழங்கினார்.
இந்த சர்வதேச திரைப்படவிழா 8 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 76 நாடுகளைச் சேர்ந்த 214 திரைப்படங்களும் 152 குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களும் திரையிடப்பட உள்ளன.
சத்யஜித் ரேயின் குழந்தைகளின் கிளாசிக் திரைப்படமான 'கூப்பி கயன் பாகா பேயன்'- அதன் 50 வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக- இது தொடக்கப் படமாக இன்று திரையிடப்படுகிறது.