குழந்தையை மோசமாக விமர்சித்த விவகாரத்தில் நடிகை ஸ்வரா பாஸ்கரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
’சன் ஆஃப் அபிஷ்’ என்ற உரையாடல் நிகழ்ச்சியில் 4 வயதுக் குழந்தையைப் பற்றி மோசமாக விமர்சித்த பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு எதிராக இணையத்தில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
’ராஞ்சனா’, ’தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’, ’நீல் பட்டே சன்னாட்டா’, ’வீரே தி வெட்டிங்’ உள்ளிட்ட படங்களின் மூலம் நடித்துப் பிரபலமானவர் ஸ்வரா பாஸ்கர்.
தனது ஆரம்ப நாட்களில் தான் நடித்த ஒரு விளம்பரத்தில், தன்னுடன் நடித்த குழந்தை நடிகர் பற்றி ஸ்வரா பாஸ்கர் மோசமான வார்த்தைகளைப் பேசும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. அந்தக் குழந்தை தன்னை ஆன்ட்டி என்று அழைத்ததால் ஸ்வரா பாஸ்கர் ஆத்திரமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் ஏமாற்றம் தந்ததாகவும், அதில் அந்தக் குழந்தை தன்னை ஆன்ட்டி என்று அழைத்தது தன்னை இன்னும் கோபமூட்டியது என்றும் கூறியுள்ளார். அந்தக் குழந்தை தன்னை ஆன்ட்டி என்று அழைத்ததற்கு முகத்துக்கு நேரே திட்டவில்லை, மனதுக்குள் திட்டிக்கொண்டேன். அடிப்படையில் குழந்தைகள் எல்லாம் சாத்தான்கள் என்று அவர் பேசியுள்ளார்.
வைரலான இந்த வீடியோவால் கோபம் கொண்ட நெட்டிசன்கள், #Swara_aunty என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமும் ஸ்வரா பாஸ்கருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது.